சுடச்சுட

  
  tambidurai

  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களைச் சந்திக்க தில்லியில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை முகாமிட்டுள்ளார். இதையொட்டி, திங்கள்கிழமை இரவு தில்லிக்கு வந்த தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  இந்நிலையில், தில்லி வருகை தொடர்பாகவும் தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் காணப்படும் இரு அணி தலைவர்களின் மனமாற்றம் குறித்தும் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: அதிமுவில் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்கெனவே வரவேற்றுள்ளோம். அதே சமயம், மீண்டும் இணைவதற்காக அவர் நிபந்தனைகளை விதிக்கவில்லை. அவரது தரப்பில் ஏதேனும் கருத்து வேறுபாடோ குறைகளோ இருந்தால் அதை அவர் தெரிவிக்க வேண்டும். அவற்றை அதிமுக நிர்வாகிகள், கழகத்தின் மூத்த தலைவர்கள் கூடிப் பேசி சுமுகமாக கட்சி இயங்க நடவடிக்கை எடுப்போம்.
  மக்களுக்காக ஆற்ற வேண்டிய பல்வேறு பொறுப்புகளை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கட்சியினருக்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது தலைமையிலான அரசு அதன் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய நாங்கள் பாடுபடுவோம் என்றார் தம்பிதுரை.
  அதிமுகவில் பன்னீர்செல்வம் தரப்பினர் சேர்ந்த பிறகு அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்று கேட்டதற்கு, 'தற்போதைய நிலையில் அது குறித்து யாரும் பேசவில்லை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai