சுடச்சுட

  

  மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் உரையாற்ற வேண்டும்: விரைவில் அமலாகிறது புதிய விதி

  By DIN  |   Published on : 19th April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இனி ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, அந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  இதைத் தவிர உள்நாட்டு விமானங்கள், கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தியைப் பிரதானப்படுத்தும் பல்வேறு பரிந்துரைகளும் விரைவில் அமலாக வாய்ப்புள்ளது.
  ஹிந்தியை பரவலாக்கும் நோக்கில், அலுவலக மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சில பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியிருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவ்வாறு இசைவு தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானவை:
  ஹிந்தியில் பேசவும், எழுதப்படிக்கவும் தெரிந்த அமைச்சர்கள் இனி அந்த மொழியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். இது குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.
  இதைத் தவிர உள்நாட்டு விமானங்களில் இனி அறிவிப்புகள் ஹிந்தியிலும் இடம்பெறும். அதன்படி, ஆங்கிலத்தைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அறிவிப்புகளை வெளியிடுவது விமான சேவை நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது.
  அனைத்து விமானங்களுக்குள்ளும் ஹிந்தி நாளிதழ்கள், வார இதழ்கள் வைத்திருக்க வேண்டும். ஆங்கில இதழ்களுக்கு இணையாக அவை இடம்பெற வேண்டியது அவசியம்.
  ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளில் ஹிந்தி மொழியை அதிகம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் மட்டுமே விடையளிக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.
  அந்த நடைமுறையை மாற்றி, மாணவர்கள் விருப்பப்பட்டால் அனைத்துத் தேர்வுகளையும் ஹிந்தியிலேயே எழுத வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோன்று நேர்முகத் தேர்விலும் ஹிந்தியில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மேற்கூறிய அனைத்து பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், அவை விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் மற்றொரு பரிந்துரையை நாடாளுமன்றக் குழு அளித்தது.
  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தபோதிலும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகே அதனை அமல்படுத்த முடியும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai