சுடச்சுட

  

  லண்டனில் விஜய் மல்லையா கைது: 3 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிப்பு

  By DIN  |   Published on : 19th April 2017 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  malaya

  மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் லண்டனில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள நீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் மூலம் ஜாமீன் பெற்று சென்ற விஜய் மல்லையா.

  பிரிட்டனில் தலைமறைவாகவுள்ள இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை (61) அந்த நாட்டின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் லண்டனில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். எனினும், 3 மணி நேரத்துக்குள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
  அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டீஷ் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
  காவல் நிலையத்தில் ஆஜர்: இந்நிலையில், மத்திய லண்டன் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் மல்லையா நேரில் ஆஜரானார். அப்போது அவரைக் கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர்மன்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  விதிகளின்படி ஜாமீன்: இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கூறியதாவது:
  இந்தியத் தரப்பில் மல்லையா மீது கூறப்பட்ட நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி உரிய விதிகளின்படி ஜாமீன் பெற்றதால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
  மல்லையா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தரப்பு இது தொடர்பாகக் கூறுகையில், மல்லையா தாமாக முன்வந்து போலீஸில் சரணடைந்து, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாமீன் நிபந்தனைகள் குறித்து வழக்குரைஞர்கள் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

  மல்லையா கருத்து
  ஜாமீனில் வெளியான பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) மல்லையா இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், 'வழக்கம்போல இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன. என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்' என்று கூறியுள்ளார்.

  இந்தியாவில் உள்ள வழக்குகள்
  கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.
  ஐடிபிஐ வங்கியில் ரூ.720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தது.

  முக்கிய முன்னேற்றம்
  மல்லையா மீது பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
  மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவந்து நமது நாட்டு நீதிமன்றங்களில் அவர் மீது முறைப்படி வழக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை இந்தியா கொணர்வதற்கான நடவடிக்கை பிரிட்டனில் சட்டப்படி தொடங்கிவிட்டது என்றனர்.
  பிரிட்டனில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படும் வெளிநாட்டவர், உச்ச நீதிமன்றம் வரை அணுகுவதற்கு அந்நாட்டு சட்டத்தில் இடம் உண்டு.
  மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் இது குறித்து கூறுகையில், 'மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. பிரிட்டனில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை இப்போது தொடங்கியுள்ளது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தப்பவிடமாட்டோம் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதியளித்துள்ளார்' என்றார்.
  மல்லையா வழக்கில் சிபிஐ-யும், இந்தியத் தூதரகமும் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai