சுடச்சுட

  

  விசாரணைக்கு ஒத்துழைக்க சுகேஷ் சந்திரசேகர் மறுப்பு: நாளை சென்னை விரைகிறது தில்லி காவல் துறை தனிப்படை

  By DIN  |   Published on : 19th April 2017 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SUKESH

  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரு இளைஞர் சுகேஷ் சந்திரசேகர், போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக தில்லி காவல் துறையின் தனிப்படை வியாழக்கிழமை சென்னை செல்லவுள்ளது.
  அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவுகளாக செயல்படுவதால் சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக முடக்கியது.
  இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக்கும் கட்சி சின்னத்துக்கும் உரிமை கோரும் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
  இதற்கிடையே, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது.
  ரூ.50 கோடி பேரம்: இந்நிலையில், கட்சித் தலைமை, தேர்தல் சின்னம் தொடர்புடைய ஆவணங்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் என்று ஆணையம் அறிவித்தது. இந்த விசாரணையின் போது, சசிகலா அணிக்கு சாதகமாக இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாகக் கூறி அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் ரூ.50 கோடி அளவுக்குப் பேரம் பேசியதாக தில்லி காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறை, தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
  எட்டு நாள் காவல்: இதையடுத்து, அவரை நீதிமன்ற அனுமதியுடன் எட்டு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து தில்லி குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல் நாள் விசாரணை செவ்வாய்க்கிழமை நடந்த போது காவல் துறை எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் சுகேஷ் சந்திரசேகர் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது தரப்பு பதிலை வற்புறுத்திப் பெறக் கூடாது என்றும் வழக்குரைஞர் துணையுடன்தான் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் அவர் விசாரணையின் போது நிபந்தனை விதிப்பதாகக் தெரிகிறது. ஹோட்டலில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ரூ.1.30 கோடி ரொக்கம் எங்கிருந்து யார் மூலம் வந்தது என்பது தொடர்பாக கேட்ட போது, 'அதைக் கண்டுபிடிப்பதுதான் காவல் துறையின் பணி. அந்தப் பணத்துக்கு நான் உரிமையாளர் அல்ல என்பது மட்டுமே தெரிவிக்க முடியும்' என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
  நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே, சுகேஷ் சந்திரசேகர் சார்பில் தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சுகேஷ் சந்திரசேகர் மீது அரசியல் காரணங்களுக்காக தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரைக் காவல் துறை விசாரிக்கும் போது, வழக்குரைஞர் உடனிருந்து சட்ட ஆலோசனை வழங்கவும் 48 மணி நேரத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  இந்நிலையில், இந்த வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாலர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக தில்லி காவல் துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் தனிப்படையினர் சென்னைக்கு வியாழக்கிழமை செல்வர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai