சுடச்சுட

  

  விவசாயிகளைச் சந்திக்க பிரதமருக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மனு

  By DIN  |   Published on : 19th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  former

  தில்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த நபர் சாட்டையால் அடிப்பது போன்ற காட்சியை சித்திரித்து மக்களை ஈர்க்கும் விவசாயிகள்.

  தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அய்யாக்கண்ணு சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என். ராஜாராமன் ஆகியோர் திங்கள்கிழமை ஆஜராகினர்.
  போராட்டக் குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு, உறுப்பினர் பழனிசாமி ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த வாதம்:
  விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் ஏற்கெனவே கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவுக்கு வரும் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இந்நிலையில், விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர் தில்லியில் 35-ஆவது நாளாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  அவர்களைச் சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக் கூறுகிறார்களே தவிர, பிரச்னைக்குத் தீர்வு காண முற்படவில்லை.
  இந்த விவகாரத்தில் பிரதமரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க விவசாயிகள் விரும்புகின்றனர். அதற்கு வசதியாக விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்க அவருக்கு உத்தரவிட வேண்டும்.
  ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையின் போது அய்யாக்கண்ணுவையும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
  இதைக் கேட்ட நீதிபதிகள் 'இந்தக் கோரிக்கையை முறைப்படி மனுவாக நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யுங்கள். அடுத்த விசாரணையின் போது விவசாயிகள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்கிறோம்' என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, நீதிபதிகளின் அறிவுரைப்படி முறையீட்டு மனு அய்யாக்கண்ணு சார்பில் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  இதைத் தொடர்ந்து, தங்களைச் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பிரதமர் அலுவலகத்தில் உள்ள அவரது முதன்மைச் செயலருக்கு முகவரியிட்டு அய்யாக்கண்ணு தரப்பு செவ்வாய்க்கிழமை கடிதம் அளித்தது.
  36-ஆவது நாளாகப் போராட்டம்: இந்நிலையில், 36-ஆம் நாளாக போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் குழுவினர், தில்லி ஜந்தர் மந்தர் சாலையில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த நபர் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்ற காட்சியை சித்திரித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai