சுடச்சுட

    

    1,800 விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 4,100 கோடி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 19th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக 1,800 விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கு ரூ.4,100 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்ற வழக்குகளை விசாரிக்க 1,734 விரைவு நீதிமன்றங்களை 5 ஆண்டு காலத்துக்கு அமைக்க வேண்டும் என்று 11-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது.
    அதன்படி உருவாக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களின் பதவிக் காலம் 2005, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இது தொடர்பான வழக்கில், விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டை தாம் கண்காணிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், 5 ஆண்டுகாலத்துக்கு அமைக்கப்படும் விரைவு நீதிமன்றங்களை திடீரென்று மூடிவிடக் கூடாது என்றும் இத்திட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
    அதன்படி, 2005, மார்ச் 31-ஆம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடையவிருந்த 1562 விரைவு நீதிமன்றங்களை மேலும் 5 ஆண்டு காலத்துக்கு (2010 மார்ச் 31 வரை) இயங்கச் செய்வதற்கு அப்போதைய மத்திய அரசு அனுமதியளித்தது. பின்னர் 2011 வரை அவற்றின் பதவிக்காலம் நீட்டித்தது. அதன் பின், விரைவு நீதிமன்றங்களுக்கு இனியும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்தது.
    இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கு 14-ஆவது நிதிக் குழு ரூ.4144,14 கோடியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு 1,800 விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    இது தொடர்பாக நிதிக் குழுவிடம் மத்திய அரசு அளித்த முன்மொழிவில் கீழமை நீதிமன்றங்களில் உருவாக்கப்பட்டுள்ள 1,800 நீதிபதி பணியிடங்கள் இந்த விரைவு நீதிமன்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உச்ச நீதிமன்றம் கடந்த 2012-இல் பிறப்பித்த உத்தரவில் கீழமை நீதிமன்றங்களில் 10 சதவீதம் அளவுக்கு கூடுதல் நீதிபதி பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன் எண்ணிக்கையே 1,800 ஆகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai