தலைமறைவான மல்லையா, இந்தியாவில் தலைகாட்ட வாய்ப்பு உள்ளதா?

தள்ளுபடியே செய்ய முடியாத அளவுக்கு விஜய் மல்லையாவுக்கு எதிராக போதுமான சாட்சியங்களையும் ஆதாரமான ஆவணங்களையும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு ஏற்பட
தலைமறைவான மல்லையா, இந்தியாவில் தலைகாட்ட வாய்ப்பு உள்ளதா?

தள்ளுபடியே செய்ய முடியாத அளவுக்கு விஜய் மல்லையாவுக்கு எதிராக போதுமான சாட்சியங்களையும் ஆதாரமான ஆவணங்களையும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9000 கோடி அளவுக்குக் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்தில் சென்று குடியேறி, தலைமறைவான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக தலைமறைவு தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்தே, லண்டனில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை முறைப்படி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

லண்டனில் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ரூ.5.4 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். மே 17ம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் நாடு கடத்துதல் சட்டம் 2003 பிரிவு 2ன் கீழ் விஜய் மல்லையாவின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படும். மத்திய அரசின் சார்பில் இங்கிலாந்து அரசு வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைப்பர்.

விசாரணையில், இந்திய சிபிஐயும், அமலாக்கத் துறையும் மல்லையாவுக்கு எதிராக, அவர் கடன் தவணைகளைக் கட்டத் தவறியதை நிரூபிக்க தாக்கல் செய்யும் ஆவணங்கள் மீது இங்கிலாந்து நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும், விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோருவதில், எந்த அரசியல் விவகாரமும், பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்பதை மத்திய அரசு தெள்ளத் தெளிவாக நிரூபிக்க வேண்டும்.

ஒரு வேளை இது அனைத்தும் சரியாக நடந்தால், இங்கிலாந்து நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு மாகாண செயலருக்கு கோரிக்கை விடுப்பார். அதன் பிறகு விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், இதுபோன்ற பல வழக்குகளில், முக்கிய பிரமுகர்கள் சிலரை நாடு கடத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை, ஆவணங்களில் திருப்தி ஏற்படாததால், இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்த வரலாறுகளும் உண்டு.

அதில்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து, உத்தரவு பிறப்பிக்க 6 மாதம் முதல் ஒரு ஆண்டு கூட ஆகலாம் என்று விஜய் மல்லையாவின் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் அமித் தேசாய் கூறியுள்ளார்.

விஜய் மல்லையா மீது இந்தியாவில் உள்ள வழக்குகள்

கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.

ஐடிபிஐ வங்கியில் ரூ.720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தது.

முக்கிய முன்னேற்றம்

மல்லையா மீது பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:

மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவந்து நமது நாட்டு நீதிமன்றங்களில் அவர் மீது முறைப்படி வழக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை இந்தியா கொணர்வதற்கான நடவடிக்கை பிரிட்டனில் சட்டப்படி தொடங்கிவிட்டது என்றனர்.

பிரிட்டனில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படும் வெளிநாட்டவர், உச்ச நீதிமன்றம் வரை அணுகுவதற்கு அந்நாட்டு சட்டத்தில் இடம் உண்டு.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் இது குறித்து கூறுகையில், 'மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. பிரிட்டனில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை இப்போது தொடங்கியுள்ளது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தப்பவிடமாட்டோம் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதியளித்துள்ளார்' என்றார்.

மல்லையா வழக்கில் சிபிஐ-யும், இந்தியத் தூதரகமும் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com