சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்களின் வாகனங்களில் சுழல் விளக்குக்குத் தடை: மே 1 முதல் அமல்

  By DIN  |   Published on : 20th April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  light

  குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களின் (விவிஐபிக்கள்) வாகனங்களில் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் சிவப்பு நிற சுழல் விளக்குகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் போன்ற அவசரகால மற்றும் நிவாரண சேவை வாகனங்கள் தவிர்த்து, பிற வாகனங்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகளை பயன்படுத்துவதற்கு மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
  சுழல் விளக்குத் தடை குறித்து மத்திய அரசு நீண்டகாலமாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவிஐபிக்கள் வாகனங்களில் சிவப்பு நிற சுழல் விளக்குகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி, மே மாதம் 1-ஆம் தேதிக்குப் பிறகு, தங்களது வாகனத்தில் யாரும் சிவப்பு நிற சுழல் விளக்குகளை ஒளிர விட முடியாது. நீல நிற சுழல் விளக்குகளை, அவசரகால ஊர்திகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சிறப்புச் சலுகைகள் கிடையாது. இதுதொடர்பாக மோட்டார் வாகன விதிகளில் விரைவில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.
  இதனிடையே, மத்திய அரசின் முடிவை செயல்படுத்தும் வகையில், முதல் நபராக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது வாகனத்தில் உள்ள சுழல் விளக்கை அகற்றினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மக்களுக்கான அரசாக மத்திய பாஜக அரசு செயலாற்றி வருவதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
  நாட்டின் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் குடியரசுத் தலைவர், பிரதமரில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் வரை சிவப்பு நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் வலம் வருவது அரசு நடைமுறைகளில் ஒன்று. காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள்கூட விஐபி-க்களின் வாகனங்கள் செல்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  இம்முறை ஒழிக்கப்பட்டு, சாதாரண வாகனம் போன்றே விஐபிக்களின் வாகனங்களும் சாலையில் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானோரது விருப்பமாக இருந்தது. இந்நிலையில், அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில் மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai