சுடச்சுட

    

    குல்பூஷண் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 20th April 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
    இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
    இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையால் கடும் எதிர்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. மேலும், அவரை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    அந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி அனு மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சஞ்சய் ஜெயின் வாதிட்டதாவது:
    இதுபோன்றதொரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பான ஆலோசனையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது. மேலும், குல்பூஷண் ஜாதவை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் மனுதாரர் நீதிமன்றத்தை அணுக உரிமையுள்ளது. ஆனால், குல்பூஷண் யாதவை மீட்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த மனு தேவையற்ற ஒன்று என்றார் அவர்.
    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடிசெய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai