சுடச்சுட

  

  ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்தியா சம்மன்

  By DIN  |   Published on : 20th April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்தியா புதன்கிழமை அழைப்பாணை விடுத்தது.
  பாகிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக கூறி, முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது.
  இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், குல்பூஷண் விவகாரத்தில் நேர்மையற்ற விசாரணையை பாகிஸ்தான் மேற்கொண்டதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியது.
  எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான், குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளது.
  மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி வழங்குவதற்கும் அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.
  நேரில் ஆஜர்: இந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையது ஹைதர் ஷாவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் புதன்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டது.
  இந்த அழைப்பாணையை ஏற்று, தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் சையது ஹைதர் ஷா நேரில் ஆஜரானார்.
  அப்போது, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி கிடைப்பதற்கு அனுமதி வழங்குமாறு அவரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மறுக்கப்படுவது என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சர்வதேச விதிகளையும் பாகிஸ்தான் மீறுவதைக் காட்டுவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  சந்திப்பு ஒத்திவைப்பு: இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் தெஹ்மினா ஜாஞ்சுவாவை பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே இஸ்லாமாபாதில் புதன்கிழமை மாலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், கடைசி நேரத்தில் இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai