சுடச்சுட

  

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 20th April 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  'பாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
  பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
  இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா புதன்கிழமை கூறுகையில், 'மதம், இனம், ஜாதி போன்ற வேறுபாடுகளைக் கடந்து, சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாகும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு திருப்தி அளிப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  அனைவரும் ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தும் பிரதமர் மோடி, தனது அமைச்சர்கள் என வரும்போது மட்டும், அதனை மறந்துவிடுவார். ஆனால், இந்த முறை அதுபோன்று மறக்காமல் இருப்பார் என நம்புகிறேன்.
  பாபர் மசூதி இடிப்பு வழக்கு அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருந்தபோதிலும், சட்டத்தின் மாண்பு குறைவுபடவில்லை என்பது தற்போது நிருபணமாகியுள்ளது என்றார் அவர்.
  மோடி மீது லாலு சாடல்: இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
  அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அப்படிப்பட்ட சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைக்கு அனுமதி கேட்டது, பிரதமர் மோடியின் திட்டமிட்ட அரசியலாகும்.
  குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியின் பெயர் அடிபட்டு வரும் சூழலில், தனது அரசியல் தந்திரத்தால், போட்டியில் இருந்து அத்வானியின் பெயரை நீக்கிவிட்டார் மோடி. மோடியை பிடிக்காதவர்கள் கட்சிக்குள் இருந்தாலும் சரி, கட்சிக்கு வெளியே இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக ஆபத்தான அரசியலில் ஈடுபடுவதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது என்றார் லாலு.
  உமா பாரதியை நீக்க கோரிக்கை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உமா பாரதியை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
  இதனிடையே, உமா பாரதி பதவி விலகுவாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'அதுபோன்ற சூழல் எதுவும் எழவில்லை. அமைச்சரவையை பொருத்தவரை, தற்போதுள்ள நிலையே தொடரும்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai