சுடச்சுட

  
  Modi

  இலங்கை, ரஷியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
  இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
  இலங்கையில் அடுத்த மாதம் 2-ஆவது வாரத்தில் 'சர்வதேச விசாக தினம்' கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அங்கு செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய பகுதிகளுக்கும் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இலங்கைப் பயணத்துக்கு பின்னர், ரஷியாவுக்கு செல்கிறார் மோடி. அங்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச வர்த்தக மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
  இதைத் தொடர்ந்து, கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஜூன் 7,8 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ஜெர்மனியில் ஜுலை 7,8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி-20 நாடுகள் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளார். மேலும், ஸ்பெயின், இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளுக்கும் அவர் செல்லவிருக்கிறார்.
  இஸ்ரேல் பயணத்தின் மூலம், அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்று பெருமையை மோடி பெறவிருக்கிறார். இப்பயணங்களுக்கான தேதிகள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  இலங்கையில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, சர்வதேச விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 குழுக்கள் பங்கேற்கும் பௌத்த மத மாநாடும் நடைபெறவுள்ளது.
  இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இலங்கை வருவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு நீதித் துறை அமைச்சர் விஜயதாசா ராஜபட்ச புதன்கிழமை தெரிவித்தார்.
  புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, உயிர் துறந்தது என மூன்று முக்கியத்துவமும் கொண்ட நாளாக, 'விசாக' தினத்தை பௌத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர்.
  முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் இலங்கைப் பயணம் மேற்கொண்டார். தற்போது 2-ஆவது முறையாக அவர் அங்கு செல்லவிருக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai