சுடச்சுட

  

  வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு நேரடி கடனுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  By DIN  |   Published on : 20th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அடிப்படை உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்காக, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நேரடியாக கடனுதவி பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில அரசுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தாங்கள் செயல்படுத்தி வரும் முக்கிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்காக, வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நேரடியாக கடனுதவி பெறலாம். இதற்காக, மத்திய அரசு வகுத்துள்ள புதிய நெறிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  இதற்கு முன்பு, மத்திய அரசு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நேரடியாக கடனுதவி பெற நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
  தற்போது வெளிநாடுகளிலிருந்து மாநில அரசு நிறுவனங்கள் நேரடியாக கடனுதவி பெற அனுமதி கிடைத்திருப்பதால் பல்வேறு மாநிலங்கள் பயன்பெறும்.
  முதல்கட்டமாக, மும்பை துறைமுக இணைப்புத் திட்டத்துக்கு தேவையான நிதியை ஜப்பான் சர்வதேச நிறுவனத்திடமிருந்து (ஜேஐசிஏ) கடனாகப் பெற மும்பை பெருநகர வளர்ச்சி வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சர்க்கரை இருப்பு வரம்பு நீட்டிப்பு: சர்க்கரை வர்த்தகர்களுக்கான இருப்பு வரம்பை மேலும் ஆறு மாதகாலத்துக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்திருக்கும் நிலையில், சர்க்கரையை பதுக்கி வைத்து லாபமீட்டும் செயலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai