சுடச்சுட

  

  2ஜி: இரு தரப்பு வாதங்கள் நிறைவு: விசாரணை 25-க்கு தள்ளிவைப்பு

  By DIN  |   Published on : 20th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கின் இறுதி வாதம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
  இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர், சிபிஐ ஆகிய இரு தரப்பு வாதங்கள் கடந்த 13-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கின் இறுதி வாதங்கள் தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
  அப்போது சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர், அமலாக்கத் துறை ஆகிய இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவுக்கு வருகிறது. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட நடைமுறைகள் வரும் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டார்.
  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தனித் தனியாக வழக்குத் தொடுத்துள்ளன. இந்த வழக்கில் 2011-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, 2014-இல் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  இதில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, இயக்குநர் வினோத் குமார் கோயங்கா, குசேகன் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாகிகள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், சினியூக் ஃபிலிம்ஸ் நிறுவன இயக்குநர் கரிம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் பி.அமிர்தம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
  2ஜி அலைக்கற்றையை விதிகளை மீறி ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு வழங்க மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. மேலும், இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைத்ததும் அதற்கு கைமாறாக ராசா சார்ந்துள்ள திமுக ஆதரவு கலைஞர் டிவி நிறுவனத்தில் ஸ்வான் டெலிகாம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாகவும் அதை லஞ்சம் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.
  ஆனால், இந்தத் தொகை வெறும் கடன் மட்டுமே என்றும், தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சி திட்டத்தில் வருவாயைப் பெருக்குவதற்காக கடன் வாங்கியதாகவும் கலைஞர் டிவி நிறுவனம் கூறியது. மேலும், பிந்தைய காலத்தில் கடன் பெற்ற நோக்கம் ஈடேறவில்லை என்பதால் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி போட்டு மீண்டும் அதே நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவி நிறுவனம் செலுத்தியதாகவும் இந்த பணப் பரிமாற்றத்துக்கு உரிய வரி பிடித்தம் செய்து அதை முறைப்படி செலுத்தியதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. எனினும், இந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய பிறகே வாங்கிய தொகை திருப்பி செலுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai