சுடச்சுட

  

  அரசியல்வாதிகளுக்கு தலையாட்ட வேண்டாம்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ராஜ்நாத் அறிவுரை

  By DIN  |   Published on : 21st April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAJNATH

  ஆட்சியாளர்கள் தவறான உத்தரவைப் பிறப்பித்தால், அதைச் சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, அவர்கள் கூறும் அனைத்தையும் ஆமோதிக்கும் தலையாட்டி பொம்மைகளாக இருக்கக் கூடாது என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
  மக்கள் நலனுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பதில் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது எனவும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
  குடிமைப் பணி அதிகாரிகள் தினம் தில்லியில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங், ஆட்சி நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்துப் பேசினார். மக்கள் நலனுக்கான திட்டங்களில் ஐஏஸ் அதிகாரிகள் ஆற்றி வரும் பங்களிப்பை புகழ்ந்து பேசிய அவர், அதேவேளையில் ஆட்சியாளர்களிடம் தலையாட்டி பொம்மைகள் போல அவர்கள் செயல்படக் கூடாது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது:
  குடிமைப் பணி என்பது பிற பணிகளைப் போல அல்ல. அதற்கென கூடுதலான அதிகாரங்களும், பொறுப்புணர்வும் உண்டு. நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஏழை மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
  நல்லாட்சி என்பதைத் தாண்டி நவீன தொழில்நுட்பத்திலான ஆட்சி நிர்வாகம் என்ற நிலையை மத்திய அரசு எட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை, மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிப்பு என பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, தரமான கல்வி, சுகாதார வசதி, உணவு என்ற நோக்கத்தை அடைய பிரதமர் பாடுபட்டு வருகிறார். அவரது கனவை நனவாக்குவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்.
  நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் ஐஏஎஸ் அதிகாரிகளை எஃகு கவசங்கள் என்று கூறுவார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் அந்தக் கவசங்கள் இன்னும் வலிமையுடனேயே இருக்கின்றன.
  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கடமையுணர்வு, பொறுப்புணர்வுடன் சேர்த்து நடுநிலை தவறாத உணர்வும் இருத்தல் அவசியம். அப்போதுதான் பாரபட்சமின்றி முடிவுகளை எடுக்க முடியும். ஆட்சியாளர்கள் ஒருவேளை தவறான உத்தரவைப் பிறப்பித்தால், அதனைச் சுட்டிக்காட்ட அவர்கள் தயங்கக் கூடாது. இதில் அச்சமோ, தயக்கமோ தேவையில்லை. அனைத்தையும் ஆமோதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மனசாட்சிக்கு துரோகமின்றி ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai