சுடச்சுட

  

  ஆதர்ஷ் ஊழல்: அசோக் சவாணுக்கு எதிரான நடவடிக்கை சரியானது: நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு வாதம்

  By DIN  |   Published on : 21st April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேட்டில் காங்கிரஸ் எம்.பி. அசோக் சவாணுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள மாநில ஆளுநர் அனுமதி அளித்தது சரியானதுதான் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
  கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்குவதற்காக மும்பையில் ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதிலும், அதன் ஒதுக்கீட்டிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கடந்த 2010-ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. மகாராஷ்டிரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த முறைகேட்டால், அப்போது மாநில முதல்வராக இருந்த அசோக் சவாண் பதவி விலக நேரிட்டது.
  இந்த வழக்கில், தமக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்ததை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அசோக் சவாண் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஆளுநர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது. உரிய முறையில் பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டுள்ளார்' என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
  அதற்கு பதிலளித்தது, மகாராஷ்டிரத்தில் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'அசோக் சவாண் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால்தான் அவருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி வழங்கினார். இதில் சட்டவிரோதச் செயல்பாடுகளோ அல்லது அரசியல் உள்நோக்கமோ இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.
  முன்னதாக, ஆதர்ஷ் வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே அசோக் சவாண் பெயரை சிபிஐ இணைத்தது. ஆனால், அப்போது ஆளுநராக இருந்த கே.சங்கரநாராயணன் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். எனினும், வழக்கில் அவரது பெயரைச் சேர்பதற்கு தற்போதைய ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், கடந்த ஆண்டு இதற்கு அனுமதி அளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai