சுடச்சுட

  

  ஐஎஸ் பயங்கரவாதிகள் 4 பேர் கைது: பெரிய அளவிலான தாக்குதல் சதி முறியடிப்பு

  By DIN  |   Published on : 21st April 2017 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arest

  உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்.

  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில போலீஸார், தில்லி சிறப்புக் காவல் படையினருடன் இணைந்து வியாழக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  இதன்மூலம், பெரிய அளவிலான தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து, உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை பிரிவின் ஐஜி அஸீம் அருண் நொய்டாவில் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்போவதாக கிடைத்த தகவலின்பேரில் தில்லி சிறப்புக் காவல் படையினர், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை பிரிவினர், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், பிகார் மாநிலங்களின் போலீஸார் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
  இதன்படி, உத்தரப் பிரதேசத்திலுள்ள பிஜ்னோர் மற்றும் முஸாஃபர்நகர், மகாராஷ்டிரத்திலுள்ள மும்பிரா, பஞ்சாபிலுள்ள ஜலந்தர், பிகாரிலுள்ள நர்காதியாகஞ்ச் ஆகிய 5 இடங்களில் வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
  இதில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோராஸன் பிரிவைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
  இவர்களில் முஃப்தி ஃபைஸான், தன்வீர் ஆகிய இருவர் பிஜ்னோரிலும், நசீம் சம்ஷாத் அகமது (26) மும்பிராவிலும் கைதாகினர். மேலும் ஜலந்தரில் முஸாமில் என்பவர் பிடிபட்டார். அவர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
  கைது செய்யப்பட்டுள்ள முஃப்தி ஃபைஸான் உள்ளிட்ட மூவரும் இந்தியாவில் பெரிய அளவிலான தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாகக் கருதப்படுகிறது. மூவரும் இணையம் மூலமாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். அவர்களிடமிருந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  முஃப்தி ஃபைஸான் உள்ளிட்ட மூவரும் நொய்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். பின்னர், அவர்களை லக்னௌவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
  5 மாநிலங்களில் தேடுதல் வேட்டை ஏன்?: கடந்த மார்ச் 7-ஆம் தேதி லக்னௌவில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோராஸன் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.
  அவற்றின் அடிப்படையிலேயே மேற்கண்ட 5 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் அஸீம் அருண் தெரிவித்துள்ளார்.
  25 வயதுக்கு உள்பட்டவர்கள்:
  தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் 18 முதல் 25 வயதுக்கு உள்பட்டவர்கள் என்று உத்தரப் பிரதேச காவல்துறை துணைத் தலைவர் (சட்டம் - ஒழுங்கு பிரிவு) தல்ஜீத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் லக்னௌவில் கூறியதாவது:
  உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், பிகார் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வேகமாகக் காலூன்றி வருகிறது. இந்த மாநிலங்களில், இளைஞர்கள் பலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
  ஐஎஸ் அமைப்பு குறித்து இணையத்தில் கிடைக்கும் தகவல்களால் ஈர்க்கப்பட்டே அவர்கள் அதில் சேர்ந்து வருகின்றனர்.
  தேடுதல் வேட்டையில் பிடிபட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்களுள் ஒருவர் ஐஎஸ் அமைப்புக்கு நிதியுதவி அளிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
  மேலும், அவர்கள் பெரிய அளவிலான தாக்குதல் நடத்துவது குறித்து தங்களுக்குள் தொடர்ந்து விவாதித்து வந்துள்ளனர். எனினும், அத்தகைய தாக்குதல் நடைபெறுவதற்கு முன் அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.
  கைது செய்யப்பட்டுள்ள முஃப்தி ஃபைஸான் உள்ளிட்ட நால்வரும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் பலரை இணைக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றார் தல்ஜீத் சௌத்ரி.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai