சுடச்சுட

  

  சிறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு: தாதாக்களுக்கு சலுகைகள் கூடாது: உ.பி. முதல்வர் உத்தரவு

  By DIN  |   Published on : 21st April 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தரப் பிரதேச மாநிலச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதாக்களுக்கும், சிறு குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
  சிறைச்சாலைக்குள் தாதாக்களுக்கு சலுகைகள் காட்டப்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
  மாநிலத்தில் உள்ள சிறைகளில் செல்லிடப்பேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகளை பிரபல தாதாக்கள் அனுபவித்து வருவதாக வந்தப் புகாரை அடுத்து, இந்த உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
  லக்னெளவில் மாநில உள்துறை, சிறைத் துறை, ஊழல் கண்காணிப்புத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
  இந்தக் கூட்டத்தில், மாநில காவல் துறையின் கீழ் இயங்கும் ஊழல் கண்காணிப்புத் துறையின் செயல்பாடுகளைக் கண்டு முதல்வர் அதிருப்தி அடைந்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், வியாழக்கிழமை கூறியதாவது:
  சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சிறு குற்றவாளியாக இருந்தாலும் அல்லது மிகப்பெரிய தாதாவாக இருந்தாலும், அவர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும். சிறையில் உள்ள தாதாக்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது. சிறை வளாகத்தில் அவர்கள் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த முடியாத வகையில், செல்லிடப்பேசி முடக்கக் கருவிகள் (ஜாமர்) பொருத்தப்பட வேண்டும்.
  காவல் துறையின் அனைத்து பிரிவுகளிலும் ஊழல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள ஊழியர்களை அடையாளம் காண வேண்டும். சிறு பிரச்னையாக இருந்தாலும், மக்களிடம் காவல் துறையினர் நேரடியாகப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் ஊழலின்றி, வெளிப்படையான முறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
  சாமானிய மக்களும் பாதுகாப்பை உணரும் விதமாகவும், குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், காவல் துறையினர் தங்களது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியதாக அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai