சுடச்சுட

  

  சொத்துக் குவிப்பு: ஹிமாசல் முதல்வரிடம் 9 மணி நேரம் விசாரணை

  By DIN  |   Published on : 21st April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  veerapathrasing

  தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசும் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்.

  வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக, தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை மத்திய இரும்புத் துறை அமைச்சராக வீரபத்ர சிங் இருந்தார்.
  அப்போது, அவரது வருவாயைவிட 192 சதவீதம், அதாவது ரூ.10 கோடி அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீதும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த 2015-ஆம் ஆண்டு புகார் தெரிவித்தது.
  அந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வீரபத்ர சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
  இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கும், சிபிஐ கைப்பற்றிய சில ஆவணங்கள் குறித்து பதிலளிக்கவும் நேரில் ஆஜராகுமாறு வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. எனினும், பணி நிமித்தமாக நேரில் ஆஜராக முடியாது என்று இருமுறை அந்த அழைப்பாணையைத் தவிர்த்து வந்த வீரபத்ர சிங், நேரில் வருவதற்குப் புதிய தேதியை நிர்ணயம் செய்யுமாறு கடந்த வாரம் கோரியிருந்தார்.
  அதையடுத்து, அமலாக்கத் துறையின் புதிய உத்தரவுப்படி அவர் வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 9 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த விசாரணைக்குப் பிறகு இரவு 9.20 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
  இந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா உள்ளிட்ட பலருக்கு எதிராக, சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அமலாக்கத் துறை முன்பு வீரபத்ர சிங் நேரில் ஆஜரானார். அடுத்த கட்ட விசாரணைக்காக அவர் மீண்டும் நேரில் அழைக்கப்படுவார் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai