சுடச்சுட

  

  ஜாகீர் நாயக்குக்கு எதிராக பிடியாணை: மும்பை என்ஐஏ நீதிமன்றம் பிறப்பிப்பு

  By DIN  |   Published on : 21st April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  zakir

  பயங்கரவாத வழக்கில், சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்குக்கு எதிராக மும்பை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்தது.
  வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள பேக்கரியில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி 5 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 வெளிநாட்டினர் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  இத்தாக்குதலில் தொடர்புடைய சில பயங்கரவாதிகளை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக்கின் போதனைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்' என்று தெரிவித்திருந்தார்.
  இதைத் தொடர்ந்து, ஜாகீர் நாயக்கிற்கு எதிராகவும், அவரது இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் அதிகாரிகள் மீதும் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ (பல்வேறு சமூகங்களுக்கு இடையே மதத்தின் அடிப்படையில் விரோதத்தை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  தவிர, வெறுப்பூட்டும் வகையில் மதப் பிரசாரம் மேற்கொண்டதற்காக ஜாகீர் நாயக்கிற்கு எதிராக சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் மற்றொரு வழக்கையும் என்ஐஏ கடந்த ஆண்டு பதிவு செய்தது. இவ்வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்போது நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
  இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்கிற்கு என்ஐஏ மூன்று முறை அழைப்பாணைகளை அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, 'ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இண்டர்போலின் உதவியை நாங்கள் நாட வேண்டியுள்ளது.
  எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணையைப் பிறப்பிக்க வேண்டும்' என்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த சிறப்பு நீதிபதி வி.வி.பாட்டீல், என்ஐஏவின் கோரிக்கையை ஏற்று, ஜாகீர் நாயக்குக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தார்.
  முன்னதாக, அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவருக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai