சுடச்சுட

  

  ஜிஎஸ்டி வரி விதிப்பு துணிச்சலான நடவடிக்கை: பன்னாட்டு நிதியம் பாராட்டு

  By DIN  |   Published on : 21st April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் சரக்கு - சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) அமல்படுத்தத் திட்டமிட்டிருப்பது இந்திய அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை என்று பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிரிஸ்டீன் லாகர்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் சார்பில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுதொடர்பாக கிறிஸ்டீன் பேசியதாவது:
  இந்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் குறிப்பாக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது பெரிய அளவிலான பொருளாதார மாற்றத்துக்கு வித்திட்டது.
  அந்த திடீர் அறிவிப்பால் ஏற்பட்ட பின்விளைவுகளும், தாக்கங்களும் தற்போது 75 சதவீதம் சீராகி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதன் பயனாக நிகழாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது.
  தற்போது நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த இந்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இது ஒரு துணிச்சலான நடவடிக்கை. அதன் விளைவுகள் ஆக்கப்பூர்வமாகவும், பலன் தரும் வகையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai