சுடச்சுட

    

    'தலாக்: முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்துக்கு முடிவுகளைத் திணிக்க உரிமை இல்லை'

    By DIN  |   Published on : 21st April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலாக் நடைமுறை உள்ளிட்ட விவகாரங்களில் தனது முடிவுகளைத் திணிப்பதற்கு முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்துக்கு உரிமை இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிச் சட்ட வாரியத்தின் தலைவர் ஷைஸ்தா அம்பர் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    முஸ்லிம் தனிச் சட்ட வாரியமானது, சட்ட விதிகளை மதிக்காத கட்டப் பஞ்சாயத்துகளைப் போல் செயல்படக் கூடாது. தலாக் உள்ளிட்ட விவகாரங்களில் அது தனது முடிவுகளையோ பரிந்துரைகளையோ யார் மீதும் திணிப்பதற்கு உரிமை இல்லை. நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுதான் இறுதியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் ஷைஸ்தா அம்பர்.
    தலாக் விவாகரத்து நடைமுறை தொடர்பாக முஸ்லிம் பெண்களின் கருத்துகளை அறியும் நடவடிக்கையை உத்தரப் பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில மகளிர், குடும்ப நலத்துறை அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி, லக்னௌவில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் ஷைஸ்தா அம்பர் கலந்து கொண்டார். மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ரீட்டா பகுகுணா பேசியதாவது:
    அனைவரும் சமம் என்ற உரிமையை அரசியல்சாசனம் அளித்துள்ளது. தலாக் நடைமுறை என்பது முஸ்லிம் பெண்களுக்கு மிகவும் துரதிருஷ்டவசமானது. சில முஸ்லிம் நாடுகளிலேயே தலாக் நடைமுறை அகற்றப்பட்டு விட்டது. இந்த விவகாரத்தில் முஸ்லிம் பெண்களின் கருத்தின் அடிப்படையில் மாநில அரசு தனது தரப்பை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். கல்வியில் சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் அவசியம் என்றார் அவர்.
    இந்தக் கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 'தலாக் நடைமுறையைப் பின்பற்றுவோரை சமூகத்தில் இருந்து புறக்கணிப்பது என்று முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தெரிவித்துள்ள யோசனையானது அந்த நடைமுறையை கைவிடப்படுவதற்கு உதவாது' என்று தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai