சுடச்சுட

  
  soniagandhi

  தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  தில்லியில் உள்ள ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  மேலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொதுவான ஒரு வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
  எனினும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
  இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியதாவது:
  இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். இந்தச் சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து நிதீஷ் குமார் எடுத்துரைத்தார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை.
  இருந்தபோதிலும், குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் விருப்பம். இதுகுறித்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர்களும் அதற்கு சாதகமான பதிலையே கூறியுள்ளனர்.
  பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் இதுதொடர்பாக சோனியா காந்திதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் கே.சி. தியாகி.
  முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணியை அமைத்தது போல், வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேசியக் கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
  எனவே, சோனியா காந்தியுடனான இந்தச் சந்திப்பில் இதுதொடர்பாகவே இருவரும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai