சுடச்சுட

  

  பாஜகவைக் கட்டுப்படுத்தும் திறன் பிராந்தியக் கட்சிகளுக்கு இருக்கிறது: நவீன் பட்நாயக் சந்திப்புக்குப் பின் மம்தா உறுதி

  By DIN  |   Published on : 21st April 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamta

  தேசிய அளவில் பாஜகவைக் கட்டுப்படுத்த பிராந்தியக் கட்சிகளுக்குப் போதிய திறனுள்ளது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
  ஒடிஸா மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக வந்த மம்தா வியாழக்கிழமை மதியம் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை புவனேசுவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கொல்கத்தாவுக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:
  பிராந்தியக் கட்சிகளுக்கு பாஜக பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நான் நம்பவில்லை. நாடு முழுதும் பாஜக வளர்ந்து வருவதைத் தடுக்க அந்தந்த மாநிலக் கட்சிகளுக்குப் போதிய பலம் இருக்கிறது.
  நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பலப்படுத்த வேண்டுமெனில் அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்கிற ரீதியில் மக்களைப் பிரித்தாளும் கொள்கையைக் கொண்டது பாஜக. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
  பழம்பெரும் தலைவரும், ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான மறைந்த பிஜு பட்நாயக்குக்கு அஞ்சலி செலுத்தவே முதல்வர் நவீனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அரசியல் பற்றி நவீன் பட்நாயக்கிடம் எதுவும் பேசவில்லை. நல்ல உடல்நலத்துடன் வாழவும் பிஜு ஜனதாதளம் சிறப்பாகச் செயல்படவும் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
  மத்தியில் பாஜகவை எதிர்க்க 3-ஆவது அணி அமைப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை என்றார் மம்தா.
  பாஜக விமர்சனம்: இதனிடையே, நவீன் பட்நாயக்குடன் மம்தா நடத்தியுள்ள சந்திப்பை பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில், சீட்டு நிதி மோசடி தொடர்பான புலன்விசாணையை சமாளிப்பதில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதே மம்தா-நவீன் சந்திப்பின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
  'ஒடிஸாவில் மகா கூட்டணி அமைத்து அதில் காங்கிரஸையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மம்தாவின் யோசனையை சாதகமான முறையில் பரிசீலிப்பதாக பிஜு ஜனதா தளம் ஒப்புக் கொண்டுள்ளது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன' என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai