சுடச்சுட

  

  பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கண்டனம்

  By DIN  |   Published on : 21st April 2017 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பெட்ரோல் விற்பனை முகவர் சங்கங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கும் முடிவுக்கு பெட்ரோலிய அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை மூடினால், பொதுமக்கள் சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் (பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள்), மகாராஷ்டிரம் (மும்பை உள்ளிட்ட நகரங்கள்) ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்கள், மே மாதம் 14-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளன.
  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களுக்கான லாபத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.
  இதனிடையே, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
  பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் மூடும் முடிவை பெட்ரோலிய அமைச்சகம் ஆதரிக்கவில்லை. சில பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்களின் இந்த முடிவால், பொதுமக்கள் சிரமங்களை அனுபவிப்பார்கள். எனினும், பல பெட்ரோல் விற்பனை முகவர்கள் சங்கங்கள், இந்த முடிவை வரவேற்கவில்லை.
  எரிபொருள் இறக்குமதித் தேவையை குறைக்கும் நோக்கத்தில், வாரம் ஒருநாள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்று நோக்கத்தில் அவர் இவ்வாறு கூறவில்லை என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அடுத்த வாரம் முடிவு: இந்நிலையில், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் 46,000 விற்பனை நிலையங்களை (80 சதவீதம்) உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அகில இந்திய பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை முகவர் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடப்போவதில்லை என்று தெரிவித்தார்.
  அவர் மேலும் கூறியதாவது:
  எரிபொருள் விற்பனை லாபத் தொகையை உயர்த்துவது குறித்து, பெட்ரோல் விற்பனை சங்கங்களுடன் பெட்ரோலிய அமைச்சகம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்பதற்கு அடுத்த சில வாரங்களில் பொதுக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai