சுடச்சுட

    

    மோடியுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு: உபரி மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு விற்க அனுமதி கேட்பு

    By DIN  |   Published on : 21st April 2017 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தில்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்குமாறு மோடியிடம் அமரீந்தர் சிங் அப்போது வலியுறுத்தினார்.
    அமரீந்தர் சிங் பஞ்சாப் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமரைச் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். இதுதொடர்பாக பஞ்சாப் அரசின் செய்தித் தொடர்பாளர் ரவீண் துக்ரால் செய்தியாளர்களிடம் பின்னர் கூறியதாவது:
    பிரதமர் - பஞ்சாப் முதல்வர் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பஞ்சாப் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு தொகுப்பு நிதி வழங்க வேண்டும் என்று அமரீந்தர் சிங் அப்போது வலியுறுத்தினார்.
    மேலும், மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
    அண்டை நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளில் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை மாற்றியமைக்கத் திட்டமிட்டிருப்பது குறித்து விவாதித்த அமரீந்தர் சிங், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
    பஞ்சாபில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி கோரிய அமரீந்தர் சிங், இதன் மூலம் மாநில அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.
    இந்தக் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, அவை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதியளித்தார் என்றார் ரவீண் துக்ரால்.
    மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai