சுடச்சுட

    

    வாக்குச்சாவடிகளில் புகையிலைப் பொருள்களுக்குத் தடை: நாட்டிலேயே முதல்முறையாக தில்லி மாநகராட்சி தேர்தலில் அறிமுகம்

    By புதுதில்லி  |   Published on : 21st April 2017 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவிலேயே முதல்முறையாக, தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13,234 வாக்குச்சாவடிகளை "புகையிலை பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி'யாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தில்லி அரசின் சுகாதாரத் துறை விடுத்த கோரிக்கையின் பேரில், இந்த முடிவை தில்லி தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    தில்லியில் உள்ள 272 வார்டுகளுக்கான மாநகராட்சித் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குச்சாவடி பகுதியில் புகையிலைப் பொருள்களுக்கு தடை கோரி தில்லி சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.அரோரா, மாநில தேர்தல் ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவாஸ்தவாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருந்ததாவது:
    வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அது நடைமுறையிலும் உள்ளது. எனவே, இம்முறை மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் 13,234 வாக்குச்சாவடிகளை "புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவிக்க வேண்டும்.

    ஏனெனில், மெல்லும் வகையிலான புகையிலைப் பொருள்களும் உடலுக்கு அதிக தீங்கை விளைவிக்கக் கூடியவை. ஏற்கெனவே அவற்றின் விற்பனை தில்லியில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி பகுதிகளில் அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்தார். இதனை ஏற்ற மாநில தேர்தல் ஆணையம், மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 13,234 வாக்குச்சாவடிகளை "புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவித்தது.

    அத்துடன், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகள் இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இந்தத் தடை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பர பேனர்களை பரவலாக வைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதனிடையே, தனது இந்த கோரிக்கை குறித்து தில்லி சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எஸ்.கே.அரோரா கூறியதாவது:
    மாநகராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சுமார் 1.33 கோடி இளைஞர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வரவுள்ளனர். எனவே, புகையிலைப் பொருள்களின் பாதிப்பு குறித்து ஒரே நாளில் அவ்வளவு எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது அருமையான வாய்ப்பாக இருக்கும்.

    90 சதவீத தொண்டைப் புற்றுநோய், 40 சதவீத புற்றுநோய், 30 சதவீத கழலை நோய்கள், 20 சதவீத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளை வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு புகையிலைப் பொருள்களே காரணமாக இருக்கின்றன.

    இதை உணர்த்தும் வகையிலான விளம்பர பலகைகள், ஒவ்வொரு வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலிலும் வைக்கவுள்ளோம்.

    அத்துடன், தடை உத்தரவை மீறுவோரை கண்காணிக்கும் வகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று எஸ்.கே.அரோரா கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai