சுடச்சுட

  

  விவசாயிகளின் போராட்டப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு

  By DIN  |   Published on : 21st April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  police

  தில்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கூடாரங்களை அகற்றும் என்டிஎம்சி ஊழியர்கள்.

  தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் 38-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் உள்பட பல்வேறு போராட்டக் குழுவினர் நிறுவிய கூடாரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை போலீஸார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
  இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளை தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை கேட்டுக் கொண்டார். இருப்பினும், கோரிக்கை நிறைவேற்றப்படும் என எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவெடுத்தனர்.
  விவசாயிகள் வியாழக்கிழமை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுள்ள வேறு சில குழுவினரும் அங்கு வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்கவும் இரவில் தங்கவும் கூடாரங்கள், தடுப்புகள் அமைத்துள்ளனர். இதுபோன்ற வசதிகளை செய்து கொள்ள போலீஸ் தரப்பு அனுமதி அளிக்காது.
  இதையடுத்து, அவற்றை ஆக்கிரமிப்புகளாகக் கருதி அகற்ற தில்லி காவல் துறையினர், புது தில்லி முனிசிபல் கவுன்சில் உதவியுடன் வியாழக்கிழமை நடவடிக்கையைத் தொடங்கினர். இதன்படி, தமிழக விவசாயிகள் தங்கி போராடி வரும் கூடாரத்தை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
  இந்நிலையில், செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், 'கூடாரத்தை அகற்றுவது போல எங்களை மத்திய அரசு மறைமுகமாக எச்சரிக்கிறது. இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் ஜந்தர் மந்தரை விட்டு செல்ல மாட்டோம்' என்றார்.
  இதற்கிடையே, ஆக்கிரமிப்பு கூடாரத்தை முழுமையாக அகற்றுவதற்கு விவசாயிகள் குழுவினருக்கு ஒரு நாள் வரை போலீஸார் அனுமதி அளித்து விட்டு சென்றனர்.
  பிரசாந்த் பூஷண்: இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்தை இணைக்குமாறு தமிழக விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஸ்வராஜ் இந்தியா கட்சி உருவாக்கியுள்ள 'ஜெய் கிசான் ஆந்தோலன்' சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் ஜந்தர் மந்தர் வந்து விவசாயிகளிடம் விளக்கினார். விவசாயிகளின் போராட்டத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

  ஆக்கிரமிப்பை அகற்றும் போலீஸ் நடவடிக்கையை நிறுத்தக் கோரி காவல் துறை ஆய்வாளரிடம் கேட்டுக் கொள்ளும் விவசாய சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai