சுடச்சுட

  

  அமெரிக்காவிடம் ஹெச்1பி விசா விவகாரத்தை எழுப்பினார் ஜேட்லி

  By DIN  |   Published on : 22nd April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ArunJetly

  இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள ஹெச்1பி விசா விவகாரத்தை அமெரிக்காவிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுப்பினார்.
  அமெரிக்காவில் சிறிது காலம் தங்கி பணியாற்றுவதற்காக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெசி1பி விசா தொடர்பான நடைமுறையை கடுமையாக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் அண்மையில் கையெழுத்திட்டார்.
  இதன் மூலம் மிகுந்த திறன் வாய்ந்தவர்கள் அல்லது அதிக அளவில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய ஐ.டி. வல்லுனர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
  இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் முறையிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
  இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த விவகாரத்தை அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சரிடம் எழுப்பினார்.
  பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி சார்பில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அருண் ஜேட்லி வியாழக்கிழமை அமெரிக்கா சென்றார்.
  பின்னர் அவர், அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ரோஸை சந்தித்துப் பேசினார். அப்போது, ஹெச்1பி விசா நடைமுறைகளைக் கடுமையாக்கிய விவகாரத்தை ஜேட்லி எழுப்பியதாகத் தெரிகிறது.
  இதுகுறித்து அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஹெச்1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் கவலையை வில்பர் ரோஸிடம் அருண் ஜேட்லி பதிவு செய்தார். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜேட்லி, இரு நாட்டு நலனுக்காக இது தொடர வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  ஜேட்லியின் கருத்துகளை கவனமாக கேட்ட வில்பர் ரோஸ், இந்தியாவின் கவலையை அமெரிக்கா புரிந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஹெ1பி விசா தொடர்பான பிரச்னைகளை அமெரிக்க அரசு மறு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக கூறிய வில்பர் ரோஸ், அதேசமயம் அதிக திறமையானவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
  இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு வர்த்தக உறவு குறித்து ஜேட்லியும், வில்பர் ரோஸும் ஆலோசித்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai