சுடச்சுட

  

  உ.பி.: 40 மாவட்டங்களில் யோகா மையங்களை தொடங்க யோகி ஆதித்யநாத் உத்தரவு

  By DIN  |   Published on : 22nd April 2017 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiAdity

  உத்தரப் பிரதேசத்திலுள்ள 40 மாவட்டங்களில் யோகா ஆரோக்கிய மையங்களைத் தொடங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  இதுகுறித்து, அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
  நடப்பு நிதியாண்டில் மாநிலத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில், 40 மாவட்டங்களில் யோகா ஆரோக்கிய மையங்களைத் தொடங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  இதன்படி மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 23 ஆயுர்வேத மருத்துவமனைகள், 7 யுனானி மருத்துவமனைகள் மற்றும் 10 ஹோமியோபதி மருத்துவமனைகளில் யோகா மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
  எஞ்சிய 35 மாவட்டங்களில் யோகா மையங்களைத் தொடங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
  ஜூன் மாதம் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, லக்னௌவில் 51,000 பேர் கூட்டாக இணைந்து மேற்கொள்ளவுள்ள யோகாசனப் பயிற்சிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
  மேலும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர், ஊரகப் பகுதிகளில் போதுமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
  மேலும், மேற்கண்ட துறைகளில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வாராணசியிலுள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டடங்களையும், பெண்கள் விடுதியையும் அடுத்த 100 நாள்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
  டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றை சரியான நேரத்துக்குள் கண்டறிந்து, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  அதேபோல் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு, குழந்தைப் பேற்றுக்குப் பின் நிகழும் தாய்மார்களின் உயிரிழப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்குத் தேவையான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai