சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்: சோனியாவுடன், சீதாராம் யெச்சூரி ஆலோசனை

  By DIN  |   Published on : 22nd April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  soniagandhi

  குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆலோசனை நடத்தினார்.
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அவரது 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
  இதையடுத்து, அந்தப் பதவிக்கு யாரை தேர்வு செய்வது? என்பது குறித்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி யோசனை தெரிவித்துள்ளது.
  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் ஒத்த கருத்துகள் கொண்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
  குடியரசுத் தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக சோனியா காந்தியை, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்தார். அதையடுத்து, சோனியாவை யெச்சூரி சந்தித்துப் பேசியுள்ளார். மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஏற்கும் வகையில், பொதுவான தேர்தலை நிறுத்துவதற்கான சாத்திக் கூறுகள் குறித்து யெச்சூரி ஆலோசனை நடத்தினர். யெச்சூரியின் யோசனைக்கு சோனியா காந்தியும் சாதகமான பதிலை அளித்தார்.
  இதுதவிர, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடனும் குடியரசுத் தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. அப்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மீண்டும் எதிர்க்கட்சிகளால் பொதுவான வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், 'அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், அவர் நிறுத்தப்படலாம்; ஆனால், குடியரசுத் தலைவராக மீண்டும் பதவி வகிக்க பிரணாப் முகர்ஜி விரும்புகிறாரா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai