சுடச்சுட

  

  கூட்டத்தில் லாரி புகுந்து 15 பேர் சாவு: திருப்பதி அருகே கோர விபத்து

  By DIN  |   Published on : 22nd April 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lorry

  விபத்துக்கு காரணமான லாரி.

  திருப்பதி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை லாரி புகுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  ஆந்திர மாநிலம், திருப்பதி அருகில் உள்ள முனகலபாளையம் கிராமத்தில் ஓடும் சொர்ணமுகி ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  இதனைத் தடுத்து நிறுத்தக் கோரி அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்நிலையில், மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி முனகலபாளையம் கிராம மக்கள் ஏர்ப்பேடு காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  அப்போது, பகல் 2 மணி அளவில் பாஸ்பேட் தாது ஏற்றிக் கொண்டு திருப்பதியிலிருந்து காளஹஸ்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கூட்டத்துக்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தை இடித்துக் கொண்டு சாலையோர கடைக்குள் புகுந்து நின்றது.
  இந்த விபத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 7 பேரும், லாரியில் அடிபட்டு 6 பேரும் ஆக 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போராட்டத்தையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சாய்நாத், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா, நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் பாலமுரளி உள்ளிட்டோரும் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
  இந்த கோர விபத்துக்கு காரணமான லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
  இந்நிலையில்,காயமடைந்தவர்களை மீட்டு திருப்பதியில் உள்ள ரூயா, சிம்ஸ், காளஹஸ்தி மருத்துவமனைகளில் போலீஸார் சேர்த்தனர்.
  இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இதில் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் மாலையில் இறந்தனர்.
  காரணம் என்ன? ஓட்டுநர் மது அருந்தி விட்டு, லாரியை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
  இந்த விபத்து காரணமாக பூதலபட்டு - நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  உயிரிழந்தவர்களின் விவரங்கள்: முனகலபாளையத்தைச் சேர்ந்த சரஸ்வதியம்மாள் (56), பிரபாவதி (50), பிரகாஷ் ராவ் (56), சுதாகர் நாயுடு (50), ஜெயசந்திரா (25), கோவிந்த நாயுடு (27), நாகேந்திர நாயுடு (45), முனியம்மா (55), வசந்தி (25), கங்காதர நாயுடு (56), பிரசாந்தி (50), சுமதி (45). மேலும் ஒருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
  ஆந்திர முதல்வர் ரூ. 5 லட்சம் இழப்பீடு
  இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
  விபத்து நடந்த இடத்தை அமைச்சர் அமர்நாத் ரெட்டி பார்வையிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
  மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை
  திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி கூறுகையில், 'சொர்ணமுகி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். எனவே, போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஆந்திர அரசு, வருவாய்த் துறை, கனிமவளத் துறை அதிகாரிகளிடம் பேசி மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
  நான்கு வழிச்சாலையாக மாறுமா?
  பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'திருப்பதியிலிருந்து நெல்லூர் வரையிலான இந்த நெடுஞ்சாலையில் திருப்பதி விமான நிலையம், காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
  மேலும், மணல் லாரிகள், நெல்லூர் துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு லாரிகள் என வாகன நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. எனவே, இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். இனியாவது இந்தச் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai