சுடச்சுட

    

    திருப்பதி அருகே கோர விபத்தில் 15 பேர் பலி: லாரி ஓட்டுநர் கைது

    By DIN  |   Published on : 22nd April 2017 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lorry

    விபத்துக்கு காரணமான லாரி.

    திருப்பதி: திருப்பதி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை லாரி புகுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆந்திர மாநிலம், திருப்பதி அருகில் உள்ள முனகலபாளையம் கிராமத்தில் ஓடும் சொர்ணமுகி ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனைத் தடுத்து நிறுத்தக் கோரி அந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது, பகல் 2 மணி அளவில் பாஸ்பேட் தாது ஏற்றிக் கொண்டு திருப்பதியிலிருந்து காளஹஸ்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கூட்டத்துக்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தை இடித்துக் கொண்டு சாலையோர கடைக்குள் புகுந்து நின்றது.

    இந்த விபத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 7 பேரும், லாரியில் அடிபட்டு 6 பேரும் ஆக 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போராட்டத்தையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சாய்நாத், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா, நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் பாலமுரளி உள்ளிட்டோரும் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

    இந்த கோர விபத்துக்கு காரணமான லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இந்நிலையில்,காயமடைந்தவர்களை மீட்டு திருப்பதியில் உள்ள ரூயா, சிம்ஸ், காளஹஸ்தி மருத்துவமனைகளில் போலீஸார் சேர்த்தனர்.

    இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் மாலையில் இறந்தனர்.

    ஓட்டுநர் மது அருந்தி விட்டு, லாரியை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குருவய்யாவை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மதுபோதையில் லாரியை ஓட்டி வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai