சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை சந்திப்பு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  palanisamy

  தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) சந்தித்துப் பேசவுள்ளார்.
  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு தில்லிக்கு இரவு 8 மணியளவில் வருகிறார்.
  இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அரங்கில் மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிறகு முதல்வர் பழனிசாமி, ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
  விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழி திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளைபொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  முதல்வர் ஆலோசனை: இதையடுத்து, அவர்களின் போராட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 22) 40-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தில்லிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் பழனிசாமி விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவார் என அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
  தில்லி ஜந்தர் மந்தருக்கு சென்று விவசாயிகளை சந்திப்பதா அல்லது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் விவசாயிகள் குழுவின் தலைவரான அய்யாக்கண்ணுவை நேரில் அழைத்துப் பேசுவதா என்பது குறித்து முதல்வர் அலுவலகம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
  இந்தச் சந்திப்பின் போது விவசாயிகள் பிரதானமாக முன்வைக்கும் வங்கிக் கடன் தள்ளுபடி கோரிக்கையை, உத்தர பிரதேச மாநில அரசு பாணியில் தமிழக அரசே ஏற்றுத் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் சாதகமான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கும்பட்சத்தில் தங்கள் போராட்டத்தை விவசாயிகள் கைவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai