சுடச்சுட

  

  துணிந்து முடிவெடுங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 22nd April 2017 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  சத்தீஸ்கர் மாநிலத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை கிராமத்தை உருவாக்கியதற்காக, தண்டேவாடா மாவட்ட ஆட்சியர் செளரவ் குமாருக்கு விருது வழங்கி கெளரவிக்கும் பிரதமர் மோடி.

  மக்கள் நலனுக்கான முடிவுகளை அதிகாரிகள் துணிச்சலுடன் எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
  குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு தில்லியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
  மக்கள் நலனுக்காக, நேர்மையான முடிவுகளை துணிச்சலுடன் எடுக்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக நான் எப்போதும் துணை நிற்பேன். எனவே, பின்விளைவுகளைக் கண்டு அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
  அரசியல் ரீதியிலான மன உறுதியால், நாட்டில் சீர்திருத்தங்களை கொண்டுவர முடியும். சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான துணிச்சலை, நான் கொஞ்சம் கூடுதலாகவே பெற்றிருக்கிறேன்.
  எனினும், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பொதுமக்களின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே அந்தச் சீர்திருத்தங்களால் மாற்றத்தை உருவாக்க முடியும்.
  அரசியல் உறுதி, நிர்வாக ஒத்துழைப்பு, பொதுமக்களின் பங்களிப்பு, இவை மூன்றையும் ஒரே நேர்கோட்டில் நாம் கொண்டுவரும்போதுதான் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.
  மக்களின் நலனுக்காக, நேர்மையான நோக்கத்துடன் ஒரு முடிவை நீங்கள் எடுக்கும்போது, இந்த உலகில் யாரும் உங்களைப் பார்த்துக் கேள்வியெழுப்ப முடியாது.
  சில எதிர்பாராத நிகழ்வுகள் நேரிடலாம்; ஆனால், அந்த நேரங்களில் நான் உங்கள் பக்கம் நிற்பேன்.
  முடிவுகளை எடுப்பதில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி), சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஆகியவை முட்டுக்கட்டையாக இருப்பதாக சில அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.
  அதிகாரிகள் தங்களது முடிவுகளை ''உற்பத்தியை'' இலக்காகக் கொண்டு சீர்தூக்கி அளவிடக் கூடாது; ''பலன்களை'' இலக்காகக் கொண்டு அளவிட வேண்டும்.
  கணக்குத் தணிக்கைத் துறையின் கருத்துகளை மட்டுமே கருதினால், நாட்டில் எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டுவர இயலாது. மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மாற்று வழிகளில் நாம் சிந்திக்க வேண்டும்.
  நீங்கள் (அதிகாரிகள்) உங்களின் சிந்தனை முறைகளையும், பணிபுரியும் பாணியையும் மாற்றிக் கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும். நீங்கள் இயக்குசக்தியாக செயல்பட்டால், சவால்களும் வாய்ப்புகளாக மாறும்.
  மேலும், ''எல்லாம் எனக்குத் தெரியும்'' என்ற ஆணவப் போக்கை மூத்த அதிகாரிகள் கைவிட்டு, தங்களது இளநிலை ஊழியர்களின் புதிய சிந்தனைகளை செவிமடுத்துக் கேட்க வேண்டும்.
  அதிகாரப் படிநிலைகள், ஆங்கிலேயர் ஆட்சி விட்டுச் சென்ற மற்றுமொரு பிரச்னையாக உள்ளது.
  நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அதிகாரிகள் தங்களது அதிகாரப் படிநிலைகளைக் கடந்து, ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயல்பட வேண்டும்.
  சில முக்கியப் பிரச்னைகளில், அரசின் இரு வேறு துறைகள், வெவ்வேறு நிலைப்பாட்டினை நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றன.
  அரசு நிர்வாகத்தின் மீது சாமானிய மக்கள் கொண்டுள்ள தவறான புரிதல்களைப் போக்குவதற்கு நாம் சுய பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும்.
  மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நனவாகும் வகையில் இந்தியாவை உருவாக்குவதற்கு அதிகாரிகள் உறுதியேற்க வேண்டும். அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று மோடி கூறினார்.

  12 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விருது
  நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 12 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கி கெளரவித்தார். அரசு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக 10 விருதுகளும், புதுமை திட்டங்களை செயல்படுத்தியதற்காக 2 விருதுகளும் வழங்கப்பட்டன.
  புதுமைத் திட்டப் பிரிவில், சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பால்னார் கிராமத்தை ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை கிராமமாக உருவாக்கியதற்காக, அந்த மாவட்ட ஆட்சியர் செளரவ் குமாருக்கு பிரதமர் விருது வழங்கினார். இதேபோல், சூரியஒளி மின்விளக்குத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தங்கர்பூர் மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது.
  இதுதவிர, மத்திய அரசின் இணையவழி வேளாண் சந்தைத் திட்டம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மின்இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 10 அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

  சமூக ஊடகங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்துங்கள்
  ''சமூக ஊடகங்களை மக்கள் நலனுக்காக அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்; சுய தம்பட்டம் அடிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது'' என்று பிரதமர் மோடி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
  எனது கூட்டங்களில் விவாதத்தின் நடுவே, அதிகாரிகள் தங்களது செல்லிடப்பேசியை எடுத்து சமூக ஊடகப் பக்கங்களில் மூழ்கி விடுகிறார்கள். எனவேதான் அதிகாரிகளுடனான எனது சந்திப்புகளில் செல்லிடப்பேசிகளுக்குத் தடை விதித்திருக்கிறேன். உலகம், மின்னணு நிர்வாகத்தில் இருந்து செல்லிடப்பேசி நிர்வாகத்துக்கு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  இந்த நிலையில், சமூக ஊடகங்கள், மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
  உதாரணமாக, போலியோ தடுப்பூசி முகாம்கள் போன்ற தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டால், அவை பயனுள்ளதாக இருக்கும். அதற்குப் பதிலாக, தடுப்பூசி முகாம் ஒன்றில் பங்கேற்ற புகைப்படத்தை அதிகாரிகள் தங்களது முகநூல் பக்கங்களில் வெளியிடுவதால் எப்படி பலன் கிடைக்கும்? என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai