சுடச்சுட

  

  தொலைதூர ரயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு

  By DIN  |   Published on : 22nd April 2017 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொலைதூர ரயில்களில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி (ஏ.சி.) கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  தொலைதூர ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த மார்ச் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தொலைதூர ரயில்களில் பயணித்தவர்களில் 17.15 சதவீதம் பேர் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணித்துள்ளனர். இதன் மூலம் 32.60 சதவீத வருவாய் கிடைத்துள்ளது.
  முந்தைய ஆண்டில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 16.69 சதவீதம் பேர் பயணித்திருந்த நிலையில், தற்போது இப்பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது.
  படுக்கை வசதி கொண்ட பெட்டிகளைப் பொருத்தவரை, பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் என்பதில் இருந்து 59 சதவீதமாக குறைந்துள்ளது. வருமானமும் 45.94 சதவீதத்தில் இருந்து 44.78 சதவீதமாக குறைந்திருக்கிறது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளைவிட, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கான தேவை அதிகரித்து வருவது இத்தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
  எனவே, தொலைதூர ரயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  முழுவதும் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளைக் கொண்ட ஹம்சஃபார் விரைவு ரயிலை அண்மையில் ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் அந்த அதிகாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai