சுடச்சுட

  
  modi

  பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
  பாஜக ஆளும் மாநிலங்களில் நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவற்றை இடைவிடாது அளிக்க வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசின் திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
  பாஜக தேசியச் செயல் தலைவர் அமித் ஷாவின் ஆலோசனையின்பேரில் இதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
  இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் பூபேந்தர் யாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள முதல்வர்கள் கூட்டத்தில் பாஜக ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 5 துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உரை நிகழ்த்துவார்கள் என்றார் பூபேந்தர் யாதவ்.
  நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி: இதேபோல், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மத்தியக் கொள்கை குழு (நீதி ஆயோக்) கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்திலும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
  இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
  ஆலோசனைக் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 3 ஆண்டு செயல் திட்டம், பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட குறுகிய கால 7 ஆண்டு செயல்திட்டம், மின்சாரம், சாலை மற்றும் ரயில்வே துறையின் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
  இதுதவிர, 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் (2012-17) செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai