சுடச்சுட

  

  'பான்' அட்டைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

  By DIN  |   Published on : 22nd April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைகளுக்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
  பொது மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மத்திய அரசும் ஆதார் முக்கியம்; ஆனால் கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்தது.
  இதனிடையே, நிரந்தர கணக்கு எண் அட்டைகளுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நிதி மசோதாவில், நிரந்தர கணக்கு எண் அட்டைகள் வாயிலாக வரி ஏய்ப்பு நடைபெறுவதை குறைக்கும் வகையில், வருமான வரி தாக்கலுக்கும், நிரந்தர கணக்கு எண் அட்டைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று திருத்தம் கொண்டு வந்தது.
  இதனிடையே, நிரந்தர கணக்கு எண் அட்டைகளுடன் ஆதாரை இணைக்காதோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜுலை மாதம் 1-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
  இந்நிலையில், நிரந்தர கணக்கு எண் அட்டைகளுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது: போலி ஆவணங்கள் மூலம் நிரந்தர கணக்கு எண் அட்டைகளை பொது மக்கள் வாங்கியிருப்பது அரசு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு நபர் பல நிரந்தர கணக்கு எண் அட்டைகளை வைத்துக் கொண்டு, அந்த அட்டைகளை, போலி நிறுவனங்களுக்கு நிதியை திருப்பி விடுவதற்கு பயன்படுத்தி வந்தது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் முகுல் ரோத்தகி.
  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குத்தான், நிரந்தர கணக்கு எண் அட்டைகளுக்கு ஆதார் அவசியம் என்று அரசு அறிவித்ததா? ஏன் அதை கட்டாயமாக்கப்பட்டது?' என்று கேள்வி எழுப்பினர்.
  இதற்கு முகுல் ரோத்தகி பதிலளிக்கையில், 'முன்பு போலி ஆவணங்கள் மூலம் பொது மக்கள், சிம்கார்டுகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதை சரிபார்க்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது' என்றார்.
  இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியபோது, நிரந்தர கணக்கு எண் அட்டைகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வாதங்கள் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai