சுடச்சுட

  

  பாபர் மசூதியை இடிக்க தூண்டியது அத்வானி அல்ல: பாஜக முன்னாள் எம்.பி வேதந்தி தகவல்

  By DIN  |   Published on : 22nd April 2017 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramvilasvedha

  புதுதில்லி: பாபர் மசூதியை இடிக்க தூண்டியது அத்வானி அல்ல, நான் தான் தூண்டினேன் என்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வேதந்தி தெரிவித்துள்ளார்.

  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது லக்னோ கோர்ட்டிலும், பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் 21 பேர் சதிச் செயலில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும்ம் நடந்து வந்தது.

  இந்த வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, தற்போதைய ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண்சிங் உள்ளிட்ட 21 பேரை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து 2001-ஆம் ஆண்டு ரேபரேலி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

  இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 2010-ல் உறுதி செய்தது. இதனால் அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்களும் வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து 2011-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

  இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  எனினும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளார். எனவே, அவர் ஆளுநர் பதவியில் நீடிக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர்களுக்கு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

  பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, லக்னெள மற்றும் ரேபரேலியில் நடைபெற்று வரும் இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலேயே விசாரணை நடத்தப்படும்.

  இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை லக்னெள சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட மாட்டார்.
  வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, சாட்சிகள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராவதை சிபிஐ அமைப்பு உறுதிசெய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

  இந்த உத்தரவுக்கு அத்வானிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதந்தி கூறியிருப்பதாவது:

  பாபர் மசூதியை இடிக்க அத்வானி யாரையும் தூண்டவில்லை. நான் தான் அதை செய்தேன். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானிக்கு எந்த பங்கும் இல்லை. நான் தான் முன்னெடுத்து செய்தேன். மறைந்த அசோக் சிங்கால் மற்றும்  மஹந்த் அவித்யானத்துடன் இணைந்து விஷ்வ இந்து பரிஷ்த் அமைப்பினரை பாபர் மசூதியை இடிக்குமாறு தூண்டினோம் என்று தெரிவித்துள்ளார்.

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ள 13 பேரில் வேதந்தி பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai