சுடச்சுட

  
  rajnath singh

  மாநகராட்சிகளுக்கு போதிய அளவு நிதியை ஒதுக்கீடு செய்யாததன் மூலமாக அவற்றின் செயல்பாட்டை தில்லி அரசு தடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வடமேற்கு தில்லியின் கிராரி பகுதியில் வியாழக்கிழமை அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:
  தில்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி ஆகியவை தலைநகரை சேற்றைப் போல மாற்றியுள்ளன. ஆனால், சேற்றில் தான் தாமரை (பாஜகவின் சின்னம்) முளைக்கும் என்பதை மக்கள் அறிவார்கள்.

  மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நிர்வகித்து வரும் பாஜக முறையாகப் பணியாற்றவில்லை என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

  தேவையான அளவு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு பாஜகவைச் சேர்ந்த மாநகராட்சித் தலைவர்கள் பலமுறை கோரியும், தில்லி அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாநகராட்சிகளின் நிர்வாகத்துக்காக ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி அரசு ரூ.2,800 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

  இத்தகைய சூழ்நிலையில் எவ்வாறு மாநகராட்சிகள் பணியாற்ற இயலும்? எங்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு ஆம் ஆத்மிக்கு தார்மீக உரிமை இல்லை. மக்களை தவறாக வழிநடத்தி பாஜக அரசியல் செய்யாது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைப் போல, பாஜகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வேறுபாடு இருக்காது.

  அந்த இரு கட்சிகளுமே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. இலவச "வைஃபை' வசதி வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த ஆம் ஆத்மி, இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

  1,000 மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த நிலையில், 100 கிளினிக்குகள் மட்டுமே அமைத்துள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குப்பையை வைத்து அரசியல் நடத்துகின்றன.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டின் வாசலிலேயே குப்பைகள் பெறப்பட்டு, அவற்றைக் கொண்டு தில்லிக்கு மின்சாரம் தயாரிக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai