சுடச்சுட

  

  ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை: மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  By DIN  |   Published on : 22nd April 2017 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramvilla

  ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் சேவைக் கட்டணம் அளிக்க வேண்டியது கட்டாயமில்லை; அது வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொருத்தது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
  இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹோட்டல்களும், உணவு விடுதிகளும் சேவைக் கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயிக்கக் கூடாது. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் சேவைக்கு கட்டணம் அளிக்கலாம்.
  இது தொடர்பாக மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் (டுவிட்டர்) வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
  ஹோட்டல், உணவு விடுதிகளின் சேவைக் கட்டணம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சேவைக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டியது கட்டாயமில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பினால் சேவைக் கட்டணம் அளிக்கலாம். ஹோட்டல்களில் அளிக்கப்படும் ரசீதில் சேவைக் கட்டணம் என்பது வெற்றிடமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் விரும்பினால் அதில் தொகையை நிரப்பலாம்' என்று தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பல்வேறு ஹோட்டல்களும், உணவு விடுதிகளும் 5 முதல் 20 சதவீதம் வரை சேவைக் கட்டணத்தை கட்டாயமாக வசூலிப்பதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஹோட்டல்கள் சேவைக் கட்டணம் வசூலித்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
  தவறு செய்யும் ஹோட்டல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். நுகர்வோர் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai