சுடச்சுட

  

  இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது: அருண் ஜேட்லி

  By DIN  |   Published on : 23rd April 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ArunJetly

  இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலுவடைந்து வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

  அமெரிக்காவில் நடைபெறும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த நாடு சென்றுள்ள அருண் ஜேட்லி, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
  இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது.
  இந்திய - அமெரிக்க நல்லுறவுக்கு இரு நாட்டு தேசப் பற்றாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு நல்லுறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பரஸ்பர உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
  முன்னெப்போதையும் விட இப்போதுதான் இரு நாட்டு நல்லுறவு மிக வலிமையாகவும், பக்குவம் நிறைந்ததாகவும் உள்ளது.
  மேலும், இரு நாட்டு நல்லுறவு குறித்து கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது அதிக நம்பிக்கை பிறந்துள்ளது.
  அமெரிக்க வர்த்தகத் துறை வில்பர் ராஸ் உள்ளிட்டோருடனான பேச்சுவார்த்தையின்போது இந்த நம்பிக்கை ஏற்பட்டது. விரைவில், அமெரிக்க நிதியமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
  இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் "ஹெச்1பி' நுழைவு இசைவு (விசா) முறைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் சூழலில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியப் பணியாளர்கள் ஆற்றிய பங்கினை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  கடந்த 3 ஆண்டுகளாக உலகப் பொருளாதார மந்த நிலை நிலவியபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பையே இது காட்டுகிறது.
  நடப்பு நிதியாண்டில் (2017-18) இந்த வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். தனது முந்தைய தவறுகளிலிருந்து படிப்பினை கற்றுக்கொண்ட இந்தியா, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் அம்சங்களைக் களையெடுத்து வருகிறது. சர்வதேச பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவுவதை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கொள்கைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது என்றார் அவர்.
  இந்தோனேசிய, ஆஸ்திரேலிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை: இதற்கிடையே, பன்னாட்டு நிதியம், உலக வங்கி கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் நிதியமைச்சர்களுடன், அருண் ஜேட்லி பேச்சுவார்த்தை நடத்தினார்.
  அப்போது, பரஸ்பர வர்த்தக உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai