சுடச்சுட

  

  உ.பி.: சாதுக்கள் வேடத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

  By DIN  |   Published on : 23rd April 2017 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  police

  உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக சாதுக்கள் வேடத்தில் பயங்கரவாதிகள் நடமாடிக் கொண்டிருப்பதாக மத்தியப் பிரதேச காவல் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

  இதுதொடர்பாக மத்தியப் பிரதேச காவல் துறையின் கூடுதல் டிஜிபி, உத்தரப் பிரதேச காவல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள் குறித்து 18 பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் சாதுக்கள் போன்று வேடமிட்டுக் கொண்டு மக்களோடு மக்களாக நடமாடி வருகின்றனர்.
  மிக முக்கிமான பகுதிகளில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம்.
  மத்தியப் பிரதேச சிறைச் சாலையிலிருந்து "சிமி' இயக்கத்தைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு தப்பிச் சென்ற பிறகு அவர்கள் சாதுக்களின் உடையை அணிந்துகொண்டு போலீஸாரின் கவனத்தை திசை திருப்பினர். எனினும், அவர்கள் கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  இதேபோல், உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதம் கௌஸ் முகமது என்ற பயங்கரவாதி கரண் கத்ரி என்ற ஹிந்துப் பெயரில் வாழ்ந்து வந்ததை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நேபாள எல்லை வழியாக 48 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசியத் தகவல் கிடைத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  இதற்கு முன்பு "ஆபரேஷன் கிருஷ்ணா இந்தியா' என்ற பெயரில் உளவு பார்ப்பதற்காக ஐஎஸ்ஐ உளவாளிகள் நமது தேசத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் துறவிகள் போன்று காவி உடை அணிந்து கொண்டு இங்கு நடமாடினார்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது என்று அக்கடிதத்தில் மத்தியப் பிரதேச கூடுதல் டிஜிபி குறிப்பிட்டிருந்தார்.
  இதனிடையே, உத்தரப் பிரதேச காவல் துறையின் புதிய டிஜிபியாக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சுல்கான் சிங்கிடம் சாதுக்கள் வேடத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
  குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இதுதொடர்பாக உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், எத்தகைய அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தயாராக இருக்கிறோம்' என்றார்.
  உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற சில மாதங்களுக்குள் இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
  இதனால், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வழக்கமாக அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த மாநில காவல் துறை செய்துள்ளது.
  தலைநகர் லக்னௌவில் உள்ள சட்டப் பேரவை வளாகம், அரசு அலுவலகங்கள், அலாகாபாத் மற்றும் லக்னௌவில் உள்ள உயர் நீதிமன்ற வளாகங்கள், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  இதுதவிர, அயோத்தியில் ராமஜென்மபூமி அமைந்துள்ள இடம், ஹிந்துக்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாராணசி, மதுரா ஆகிய ஆன்மிக நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படும் நேபாள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
  இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆதேஷம்-உல்-ஹக், முகமது ஃபைஸன் ஆகிய இருவரையும் 8 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க லக்னௌ நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai