சுடச்சுட

  

  குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மீதும் கடும் நடவடிக்கை

  By DIN  |   Published on : 23rd April 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  garland

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னெளவில் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அந்த மாநில புதிய டிஜிபி சுல்கான் சிங்.

  குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்களாகவோ அல்லது முக்கியப் பிரபலங்களாகவோ இருந்தாலும் கூட, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச காவல் துறைத் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சுல்கான் சிங் எச்சரித்துள்ளார்.
  நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
  அதன்படி, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இறைச்சிக் கூடங்களை மூடுமாறு உத்தரவிட்ட அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பிரத்யேக காவல் பிரிவை உருவாக்கினார்.
  இதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், மாநிலத்தின் புதிய டிஜிபியாக சுல்கான் சிங்கை நியமிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து அப்பொறுப்பை சனிக்கிழமை ஏற்றுக் கொண்ட அவர், லக்னெளவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  மாநிலத்தில் பெண்கள், சாமானிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே போலீஸாரின் ஒரே நோக்கம். அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் ஒடுக்கப்படுவார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பிரபலங்களாக இருந்தாலும் சரி; அல்லது அரசியல் தொடர்புடையவராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் குற்றங்களை அரங்கேற்றி விட்டு இனி எவராலும் தப்பித்துச் செல்ல இயலாது.
  அதிக அளவில் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையையும், எவருடைய தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியாற்றும் சூழலையும் காவல் துறையில் இனி காண முடியும். அதேவேளையில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவக் கூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நடுநிலைத்தன்மையோடு போலீஸார் செயல்படுவதை உறுதி செய்வதே எனது முதன்மையான குறிக்கோள் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai