சுடச்சுட

  

  ஜாதி அடிப்படையில் தீர்ப்பு: கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

  By DIN  |   Published on : 23rd April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   ஜாதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு கோயில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில், கடந்த 2010 ஜனவரி 2-ஆம் தேதி இரவு கொள்ளை நடந்தது. கொள்ளையர்கள் 5 பேர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துவிட்டு அங்கு காவல் பணியில் இருந்த சுப்பிரமணியை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
  இது தொடர்பாக குமார், மாரி, ராஜா, செல்வம் மற்றும் பழனி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 5 பேர் மீதும் சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதிமன்றம், ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலையில் தீர்ப்பளித்தது.
  இதை எதிர்த்து, குமார் தவிர மற்ற நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
  இந்த வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. திருட்டைத் தொழிலாக கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கேலிக்கூத்தானது மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது. ஆகையால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
  மேலும், ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர சமூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கூடாது. இது போல ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்பு இதுவே கடைசியானதாக இருக்கட்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில், ஜாதி அடிப்படையில் எந்த தீர்ப்பும் வரக்கூடாது என்பதற்காக, இந்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai