சுடச்சுட

    
    Dinakaran3

    இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா தரப்புக்கு சாதகமாக பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக தில்லியில் டி.டி.வி.தினகரன் சனிக்கிழமை பிற்பகல் ஆஜரானார்.
    இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல் துறையினர் கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர். அவர் தங்கியிருந்த அறையில் ரூ.1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
    தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை, சசிகலா தரப்புக்கு சாதகமாக ஒதுக்க ஆணையத்தின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரன் சார்பில் சுகேஷுக்கு ஹவாலா மூலம் தரப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
    கைது செய்யப்பட்ட சுகேஷை காவலில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு சனிக்கிழமை ஆஜராகுமாறு டி.டி.வி.தினகரனுக்கு காவல் துறையினர் இரு தினங்களுக்கு முன்பு அழைப்பாணை அனுப்பினர். இதை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதற்காக சனிக்கிழமை நண்பகலில் டி.டி.வி.தினகரன் தில்லிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஜன்பத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திய அவர், பின்னர் தமது வழக்குரைஞர்களுடன் தில்லி சாணக்கியபுரி காவல் நிலையத்திற்கு பிற்பகல் 3.15 மணியளவில் சென்று விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
    இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், டி.டி.வி. தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன், அவரது நண்பரும், பெங்களூரூவைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகியோரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
    இந்த விசாரணையின் போது டி.டி.வி.தினகரன் மட்டுமே விசாரணை அதிகாரிகளிடம் பேச அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த வழக்குரைஞர்கள் விசாரணை அறைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இரவு 10 மணியளவில் தினகரனிடம் விசாரணை முடிந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி காவல் துறையினர் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai