சுடச்சுட

  

  மத்தியக் கொள்கைக் குழு கூட்டம்: மாநில அரசுகளின் செயல்பாடுகளை அறிய வழிகோலும்

  By DIN  |   Published on : 23rd April 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள மத்தியக் கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) நிர்வாகக் குழுக் கூட்டம் வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  மத்திய கொள்கைக் குழுவின் மூன்றாவது கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொள்கின்றனர்.
  பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். குறிப்பாக சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான விவாதம் கூட்டத்தில் பிரதான இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது.
  இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி சுட்டுரையில் சில பதிவுகளை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
  மத்திய கொள்கைக் குழு நிர்வாகக் குழுவின் மூன்றாவது கூட்டத்துக்கு தலைமை தாங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக நடைபெறும் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.
  அதேபோன்று புதிய இந்தியாவை வடிவமைப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை கூட்டத்தின் வாயிலாக அறிந்து கொள்ள பேராவலுடன் காத்திருக்கிறேன்.
  மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானைப் பொருத்தவரை விவசாயத் துறையில், அவரது மாநிலத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து அவர் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
  இதேபோன்று வெவ்வேறு மாநில முதல்வர்களும், தங்களது செயல்பாடுகளையும், முன்னெடுத்துள்ள திட்டங்களையும் விவரிக்க உள்ளனர். இதன் மூலம் அனைத்து மாநிலங்களின் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும் பரஸ்பரம் அறிந்து கொள்ள இயலும்.
  கூட்டத்தில் மத்திய கொள்கைக் குழு துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, புதிய இந்தியாவின் துரிதமான வளர்ச்சி குறித்து உரையாற்ற உள்ளார் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai