சுடச்சுட

  

  முதல்வரை சந்தித்த பிறகு போராட்டம் வாபஸா?  விவசாயிகள் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு பதில்

  By DIN  |   Published on : 23rd April 2017 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farmers2a

  தில்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்.

  தில்லி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான தங்களின் சந்திப்புக்கு பிறகே நீடித்து வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலிப்போம் என்று தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது, 60 வயது கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் 40-ஆவது நாளாக சனிக்கிழமை அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தில்லியில் உள்ள தன்னார்வலர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை அய்யாக்கண்ணு குழுவினரின் கோரிக்கைகளுக்கு நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும்,விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக தில்லிக்கு சனிக்கிழமை இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் அய்யாக்கண்ணு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  விவசாயிகள் விருப்பம்: இதையடுத்து, தங்களின் போராட்டத்தை விவசாயிகள் கைவிடுவார்களா என்று கேட்டதற்கு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் அளித்த பதில்: தில்லியில் நீடித்து வரும் போராட்டத்தைக் கைவிட எங்களுக்கு பல தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளுக்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) நடத்தப்படும் போராட்டத்தில் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  அந்தப் போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் விரும்புகின்றனர். அதே சமயம், எந்த நோக்கங்கள் நிறைவேறுவதற்காக நாங்கள் தில்லிக்கு வந்தோமா அது நிறைவேறாமல் எங்களால் ஊருக்குத் திரும்ப முடியாது. எங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் நிறைவேற இயன்ற அளவுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வோம்.
  அய்யாக்கண்ணு நம்பிக்கை: பிரதமரைச் சந்தித்து எங்கள் தரப்பு கோரிக்கை மனு அளிக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். முதல்வர் அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில்தான், எங்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதா அல்லது தொடருவதா என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அய்யாக்கண்ணு.
  முன்னதாக, 40-ஆவது நாள் போராட்டத்தையொட்டி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் சிறுநீரை பாட்டில்களில் சேகரித்து அதை அருந்தப் போவதாகக் கூறினர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாகப் போராட்டப் பகுதிக்கு வந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐந்து விவசாயிகளை நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் "அமைதி வழியில் போராட்டம் நடத்த மட்டுமே விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். நூதன போராட்டம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று காவல் துறை உயரதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
  தம்பிதுரை தகவல்: இந்நிலையில், தில்லிக்கு சனிக்கிழமை காலையில் வந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தித்துப் பேசுவார்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai