சுடச்சுட

  
  Susilkumar-modi

  பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்தை பினாமி பெயரில் கையகப்படுத்தியுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷில் குமார் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  எனினும், இதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, பாட்னாவில் சுஷில் குமார் மோடி சனிக்கிழமை கூறியதாவது:
  மும்பையில் செயல்படுவதாகக் கூறப்படும் ஏ பி ஏற்றுமதி நிறுவனத்தை பினாமி பெயரில் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக தில்லியில் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
  அசோக் குமார் பாந்தியா பெயரிலான ஏ பி ஏற்றுமதி நிறுவனம், மும்பையிலுள்ள 5 வைர வியாபாரிகளிடம் தலா ரூ. 1 கோடி வீதம் மொத்தம் ரூ. 5 கோடியை வட்டியில்லாக் கடனாகப் பெற்றுள்ளது. பின்னர், பாந்தியா அந்தப் பணத்தின் மூலம் தில்லியிலுள்ள நியூ ஃபிரெண்ட்ஸ் காலனி பகுதியில் 800 சதுர மீட்டர் நிலத்தை கடந்த 2007-08-இல் வாங்கியுள்ளார்.
  அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 55 கோடியாகும். அங்கு தற்போது ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 4 மாடிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
  இந்த நிறுவனத்தின் இயக்குநராக லாலுவின் மகனும், பிகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் கடந்த ஜனவரி 2011-இல் நியமிக்கப்பட்டார். மேலும் அவருடைய மூத்த சகோதரரும், பிகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் அந்த நிறுவனத்தின் இயக்குநராக கடந்த ஜுன் 2014-இல் நியமிக்கப்பட்டார்.
  எனினும் தற்போது, அவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பொறுப்பு வகிக்கவில்லை. லாலு பிரசாத்தின் மகள்களான ராகினி லாலு, சாந்தா யாதவ் ஆகியோர் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தற்போது உள்ளனர். எனினும், அந்த நிறுவனத்தின் 98 சதவீத பங்குகள் தேஜஸ்வியின் கைவசம் உள்ளன. இந்த விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மௌனம் காக்கிறார். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் பினாமி சொத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் சுஷில் குமார் மோடி.
  எனினும், இந்தக் குற்றச்சாட்டை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி தெரிவிக்கையில் "பாஜக-வில் சுஷில் குமார் மோடி ஓரம்கட்டப்பட்டுள்ள காரணத்தால், அவர் லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் மீது குறை கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai