சுடச்சுட

  

  உ.பி.யில் அரசு அலுவலகங்களில் "பயோமெட்ரிக்' வருகைப் பதிவு: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

  By DIN  |   Published on : 24th April 2017 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiAdity

  உத்தரப் பிரதேசத்தில் வட்டார அளவு வரை செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை விரல் ரேகை மூலம் வருகையைப் பதிவு செய்யும் "பயோமெட்ரிக்' முறையை அமல்படுத்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் உரிய நேரத்தில் பணிக்கு வந்து செல்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக அரசு நிர்வாகத்தை சீர்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களையும் அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
  இந்நிலையில், லக்னெளவில் கிராம மேம்பாட்டுத் துறை அதிகாரிகளை ஆதித்யநாத் சனிக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
  அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை விரல் ரேகை மூலம் வருகையைப் பதிவு செய்யும் "பயோமெட்ரிக்' முறையை அமல்படுத்த வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார்.
  மேலும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம அதிகாரியின் தொடர்பு எண்ணை மக்கள் அறியும் வகையில் எழுதிவைக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கிராமக்களுக்கு சொந்த வீடு கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வெளிப்படையாக நடைபெற வேண்டும். இதில் பணியாற்றுவோருக்கு ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பணத்தை முறையாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். கிராம மக்களின் நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai